தமிழக ஆளுநர், முன்னாள் முதல்வர், நடிகை உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொடுங்கையூரில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக-வை சேர்ந்த நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, அருவருக்கத்தக்க, ஆபாச வார்த்தைகளால் பேசியாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பி.ரேவதி, திமுக பேச்சாளர்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளில், கலகத்தை துாண்டுவது என்ற குற்றச்சாட்டை மட்டும் அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை என்றும், ஆனால் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய குற்றச்சாட்டுகளை, அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது என தீர்மானித்துள்ளார்.
அதனடிப்படையில், சிவாஜி கிருஷணமூர்த்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.