லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடனில் ரூ. 10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த 6 வார கால அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ. 10 கோடியை டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா வேண்டாமா என லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.
அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைப்திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,
லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும், வழக்கு கணக்கில் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆறு வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், பணத்தை திரட்ட அவகாசம் தேவைப்படுவதால், 10 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்கு 6 வார கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்து எட்டு வாரங்கள் கடந்து விட்டதால், அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி, விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.