மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனதாக மதுரையை சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த புகாரில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், தமிழக காவல்துறையின் தனிப்படையினரால் தாக்கப்பட்டதில் ஜூன் 28ஆம் தேதி உயிரிழந்தார். கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கூறி, நகை காணாமல் போனதாக பொய் புகார் அளிக்கப்பட்டதாக கூறும் சிபிஐ, புகார் அளித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதா என கேட்டிருந்தார். இதன்பின்னர், நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்ற மதுரை மாவட்ட நீதிமன்றம், மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நிகிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஸ்ரீமதி முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்; அஜித்குமார் நகையை எடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை; காணாமல் போன நகையை கண்டுபிடிக்க முடியவில்லை; அதற்கான சாட்சிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. புகார் பொய்யானது அல்ல என்றும், அஜீத்குமார் தாக்கப்பட்டதில் டி.எஸ்.பி. தவிர்த்து பிற உயர் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரியவில்லை என்றும்; குற்றப்பத்திரிகையுடன், கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அஜித்குமாரை காவல்துறையினர்தான் அடித்து கொலை செய்துள்ளனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறி, அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்; உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வதா? அதுபோல அடிக்க முடியாது என ஒரு காவலர் சொல்ல மறுப்பது ஏன்? என தனிப்படையினருக்கு கேள்வி எழுப்பினார்.
சட்டவிரோதமாக செயல்பட முடியாது என உயர் அதிகாரியிடம் சொல்ல வேண்டுமென்றும், அதற்காக நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்திற்கு வந்தால், நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என அறிவுறுத்தினார். இந்த வழக்கில் போலீசார் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது என்று கூறிய நீதிபதி, டி.எஸ்.பி.-க்கு உத்தரவிட்ட உயர் அதிகாரி யார் என கண்டுபிடிக்க முடியாததில் இருந்தே, எந்த அளவுக்கு அந்த உயர் அதிகாரி பாதுகாக்கப்பட்டு வருகிறார் என்பது தெரியவருவதாக அதிருப்தி தெரிவித்தார்.
அஜித்குமார் கொலை வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டதுடன், குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்படாமல் இருக்கும் காவல்துறையின் நான்கு அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கலாம் என சிபிஐ-க்கு உத்தரவிட்டு, காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.