காதலனுடன் சென்ற மைனர் பெண்ணை 24 மணிநேரத்தில் காவல்துறையால் மீட்டு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், படிப்பில் கவனம் செலுத்தும்படி நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
கடந்த மாதம் கல்லூரிக்கு சென்ற 17 வயது மகள், வீடு திரும்பாததால், அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரியான அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் நேற்று (பிப்ரவரி 17) விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் காணாமல் போன மைனர் பெண் ஒரு பையனை காதலித்து, தன் விருப்பப்படியே மாணவி சென்று உள்ளதால் வழக்குப் பதிவு செய்யவும், மைனர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் எதிராக பொதுவான வழிகாட்டுதலை சிறப்பு அமர்வு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மைனர் பெண், அந்த ஆணுடன் சம்மத்துடன் சென்று உள்ளார் என்பதற்காக, புகாரையோ அல்லது வழக்கையோ போலீசார் கைவிட முடியுமா என்றும், போக்சோ சட்டத்தின் விதிகள் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவில்லையா என்றும் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

காணாமல் போன மைனர் பெண்ணை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, கடலூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, மாணவியை மீட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை அழைத்துச்சென்ற 27 வயதான நபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


பின்னர் மாணவியை அழைத்து விசாரித்த நீதிபதிகள், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர். பெற்றோருடன் செல்ல விரும்புவதாக மாணவி தெரிவித்ததை பதிவு செய்த நீதிபதிகள், பெற்றோருடன் செல்ல அனுமதித்து, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர்.