மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றை பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கிய இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை எனவும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் கூறி, தமிழகத்தில் 42 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 474 கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 2025 ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகளின் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தபோது, அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது.

முறைகேடாக, மோசடியாக கட்சியை பதிவு செய்திருந்தாலோ, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலோ பட்டியலில் இருந்து நீக்கலாம் என்றும், ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்காக பதிவை நீக்க முடியாது என்றும், அதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை மறுத்த தேர்தல் ஆணையம், சட்டத்திருத்தம் இல்லாவிட்டாலும், கட்சிகளை பதிவு பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது எனவும், பதிவு ரத்து குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் போட்டியிடாமல், தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் என எந்த கட்சியும் உரிமையாக கேட்க முடியாது என்றும், உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதால் பட்டியலில் இருந்து நீக்க கூடாது என கூறமுடியாது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிப்பது, வழக்கில் பிரதான கோரிக்கையையே ஏற்பதற்கு சமம் என்பதால், தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, இடைக்கால தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பிரதான வழக்குகளின் இறுதி விசாரணையை மார்ச் இரண்டாவது வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.