சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாயுடன் வந்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம் அதன் வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வந்த இமெயிலில், சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் பிற்பகல் 12.45 சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் இஸ்லாமியர்கள் முன்னதாகவே நீதிமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி அறை, வாகன நிறுத்தம், பொருட்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் எந்தவித வெடிப்பொருட்களும் கண்டறியப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.