மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் குறித்த சட்டத்துக்கு பதிலாக நிறைவேற்றப்பட்டுள்ள விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி சட்டப் பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் (MGNREGA) குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை மாற்றியமைத்து, விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி சட்டம் (VB-G RAM JI) என்ற சட்டம், 2025ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தில் உள்ள எட்டு பிரிவுகளை எதிர்த்து சென்னை தி,நகரை சேர்ந்த வழக்கறிஞர் டி.சிவஞானசம்பந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், MGNREGA திட்டத்தை செயல்படுத்த, 90 சதவீத நிதியை மத்திய அரசும், 10 சதவீத நிதியை மாநில அரசும் பங்கிட்டுக் கொண்ட நிலையில், புதிய சட்டத்தில், வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்கள் 40 சதவீத நிதியை பங்களிப்பாக வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MGNREGA சட்டத்தில் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கியிருந்த நிலையில், அதை VB-G RAM JI சட்டம் நீக்கியுள்ளதாகவும், அதனால் கிராமப்புற மக்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ், பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய கிராமப்புற பகுதிகளை மத்திய அரசு தான் அறிவிக்கும் என்பன உள்ளிட்ட எட்டு பிரிவுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக உள்ளதால், அவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள், அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.