எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்கு தடைவிதித்து 2024ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமலில் உள்ளதால், 2012ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டின் மூலமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, எல்.டி.டி.ஈ. எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை (LTTE) தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.
அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம், எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், மும்மினேனி
சுதிர்குமார்
அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும்,
டெல்லி உயர் நீதிமன்றம் வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த தடை நீட்டிப்பு உத்தரவால் வைகோ பாதிக்கப்பட்ட நபர் இல்லை அல்ல என்றும், 2012ஆம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், ஆன்னல் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு காலவதிஆகிவிட்டது என்றும் வாதிட்டார்.
அப்போது வைகோ ஆஜராகி, தான் ஒரு எல்.டி.டி.ஈ. ஆதரவாளர் என்றும்,
ஏற்கனவே தீர்ப்பாயத்தில் ஆஜராகியுள்ளதாகவும், குறுக்கு விசாரணையும் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் விடுதலைப் புலிகள் போராட்ட வரலாற்றையும் நீதிபதிகளிடம் விவரித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்ட உத்தரவு 2024ல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அது அமலில் உள்ள நிலையில், 2012ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.