கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் அதிகாரிகள், தங்கள் பணியை செய்யாமல் துரோகம் செய்கிறீர்கள் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சென்னை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கபட்டதாகவும் கூறி திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலரான, சேலத்தைச் சேர்ந்த ஆ.இராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சேலம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது சேலம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வே.சபர்மதி நேரில் ஆஜராகி இருந்தார்.
அப்போது, கோவில் சொத்துக்களை பாதுகாக்க சம்பளம் வாங்கும் அதிகாரிகள், அந்த பணியை சரிவர செய்யாமல், துரோகம் செய்கிறீர்கள் என அதிகாரிகளின் அலட்சிய போக்கிற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியங்களினால் தமிழகத்தில் ஏராளமான கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளது என்றும், இவ்வாறான அலட்சியங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் நடைபெற்ற கனிம வள கொள்ளைகளுக்கு எதிராக உரிய இழப்பீடுகள் அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.