நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் இதுவரை செய்யவில்லை என அதிமுக எம்.பி. இன்பதுரை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் பிப்ரவரி 20ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து எவரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிரப்பிக்கக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனுதாரரான அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் ஆஜராகி, நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய கடந்த வாரம் உத்தரவிட்டும், லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை வழக்குப் பதிவுசெய்யவில்லை என முறையீடு செய்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது, நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதாக அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தரபிபிள் முடிவு செய்யப்பட்டுள்ளது.