மதுரை விமான நிலைய விரிவாக்க எல்லையில் வருகின்ற சின்ன உடைப்பு கிராமத்தினர் வெளியேற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, அடுத்த 2 வாரத்திற்குள் தகுதியானவர்களுக்கு மறுவாழ்வு நிலம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, அழகர், லட்சுமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இழப்பீடு முடிவு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் எடுக்கப்படவில்லை. தொழிலக பயன்பாட்டிற்காக நிலத்தை ஆராஜிதம் செய்யும் போது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். இதை 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதியும் உறுதி செய்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால் இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஆகவே மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தராமல், நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது” என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன், 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என்று சின்ன உடைப்பு கிராம மக்களுக்கும், அடுத்த 2 வாரத்திற்குள் தகுதி உள்ள நபர்களுக்கு மறுவாழ்வுக்காக இரண்டு சென்ட் நிலம் வழங்கிட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.