காவல் உதவி ஆய்வாளர் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வை நடத்தக் கோரிய வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, பத்து நாட்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்கில், “உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நடத்தியது, பிரிவு ஏ-வில் தமிழ் பகுதி தேர்வு வினாக்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பிரிவு பி-யில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன. இது ஏற்கத்தக்கது அல்ல. பலரும் இதனால் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது. ஆகவே உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதோடு, தேர்வை ரத்து செய்து மீண்டும் புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தபொது, அரசுத் தரப்பில், “தமிழ் தகுதி தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, “தேர்வுக்கான பாடத்திட்டத்தை வழங்கியுள்ள நிலையில், அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும் என தேர்வர்கள் தங்களை தயார்படுத்துகின்றனர். ஆனால் தமிழக அரசு தமிழில் ஒரு வினாவை கூட கேட்கவில்லை எனில் எப்படி? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பில், “பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் இருந்து வினாக்களை கேட்க வேண்டும் என்பதை எப்படி ஏற்கமுடியும் என குறிப்பிட்டார்.
அதற்கு நீதிபதி, “ஒரு மதிப்பெண் கூட முடிவை மாற்றலாம்” என தெரிவித்து, 10 பத்து நாட்கள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தி, வழக்கை தீர்ப்புக்காக தள்ளிவைத்து உத்தரவிட்டார்.