மேல்முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள், மனுதாரர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறார்களா என ஊழல் கண்காணிப்புத் துறை மூலம் ரகசியமாக விசாரிக்க வேண்டும் என, தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரில் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தங்களுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்துக்கு, உரிய இழப்பீடு வழங்கக் கோரி, தனியார் பள்ளி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் அந்த சாலையை சம்பந்தப்பட்ட பள்ளி ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்திருந்ததால், அதை அகற்றிவிட்டு, சாலை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்கும்படியும், பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்தால் உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நான்கு ஆண்டுகள் கழித்து, அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை பெற தாமதம் ஏற்பட்டதால், 1,421 நாட்கள் காலதாமதத்தை மன்னித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூடுதல் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தாமதத்தை மன்னிக்கக் கோரிய மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஆவணங்களை கையாளும் அதிகாரிகள் செயலற்ற தன்மையுடன் நடந்துள்ளதால், தாமதத்தை மன்னிக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், பல மேல் முறையீட்டு வழக்குகள், நொண்டி சாக்குகளை கூறி, அதிக கால தாமதத்துக்கு பின் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன என்றும், இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் அல்லது எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுவதே காரணம் என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோல தாமதமாக மேல்முறையீடு செய்வதில் அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுகிறார்களா, எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுகிறார்களா என விஜிலென்ஸ் துறை மூலம் ரகசியமாக விசாரிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.