புழல் சிறை கைதிகள் வழக்கறிஞர்களை சந்திக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.தமிழழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தண்டனை கைதிகளுக்கு உள்ள சட்ட உரிமை மூலம் நிவாரணம் தேட அவர்கள் தங்களின் வழக்கறிஞர்களின் உதவியை பெறுவதற்காக புழல் சிறையில் பார்வை நேரம் தரப்பட்டுள்ளது என்றும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளுக்கு சட்டரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது என்றும் குறிப்பித்துள்ளார்.

கைதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்காக 16 கேபின்கள் அமைக்கப்பட்டு தினமும் 3 முறை தலா அரை மணிநேரம் ஒதுக்கப்பட்டு வாய்ப்பு தரப்படுவதாகவும், இவற்றில் 8 கேபின்களில் தொலைபேசி மூலமாகவும், 8 கேபின்களில் நேரடியாகவும் கைதிகளுடன் பேச முடியும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழக்கறிஞருக்கு அனுமதிக்கப்பட்ட அரை மணிநேரத்தில் 5 கைதிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால், கைதிகளுக்கு தேவையான தெளிவான சட்டரீதியான ஆலோசனைகளை வழங்க முடியவில்லை என்றும், அதன்மூலம் கைதிகளின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பித்துள்ளார்.
அதேபோல், விசாரணை கைதிகளுக்கும் வழக்கறிஞர்களை சந்திக்க போதுமான நேரம் தரப்படுவதில்லை என்றும், சிறை நிர்வாகத்தின் இந்த குளறுபடியால் சிறை கைதிகள் தங்கள் வழக்கறிஞர்களிடம் குறைகளை சொல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, பார்வையாளர்களுக்கான கேபின்களை அதிகரிக்கவும், தினமும் 9 முறை கைதிகளை பார்க்க அனுமதிக்க கோரியும் கடந்த ஜனவரி 12ஆம் தேதி சிறைத்துறை கூடுதல் செயலாளர், சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனது மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழழகன் தன் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், விசாரணை கைதிகளுக்கு நீதி விரைந்து கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் நீதிமன்றத்தை அணுக உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், இதற்காக தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலரை இந்த வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

அவர் மனுதாரரின் கோரிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.