மதுரையில் 11 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளி பஷீருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதிப்படுத்தியுள்ளது. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை என கூறி, குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
நயவஞ்சகமாக நடந்த கொடூரம்
மதுரையை சேர்ந்த பஷீர் என்பவர், கடந்த 2021-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே வசித்து வந்த 11 வயது சிறுமியை இலக்கு வைத்துள்ளார். தாய் இல்லாத அந்த சிறுமி உறவினர் பாதுகாப்பில் வளர்ந்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து நயவஞ்சகமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் அம்பலமான உண்மை
பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தொடர் வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தனது அக்காவிடம் நடந்த உண்மைகளை கூறியுள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பஷீரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பஷீருக்கு ஆயுள் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் இளந்திரையன் மற்றும் பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் அன்பு நிதி முன்வைத்த மருத்துவ ஆதாரங்கள் மற்றும் சிறுமியின் உறுதியான வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும், குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
போக்சோ சட்டம் (POCSO Act) என்றால் என்ன?
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும் உருவாக்கப்பட்ட சிறப்பு சட்டமே POCSO (Protection of Children from Sexual Offences) ஆகும். இச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் பாதுகாக்கப்படும். மேலும், இதில் கைதாகும் குற்றவாளிகளுக்குக் கடுமையான சிறை தண்டனைகள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.