அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாப்பதில் வருவாய்த்துறை அதிகாரிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலப் பிரச்சனை தொடர்பான வழக்குகளை சரியாக கையாளாத ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாநிலம் முழுவதும் இதற்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி: 23 ஆண்டு கால இழுபறி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சேது மாதவன் மற்றும் வேல்முருகன் ஆகியோர், கடந்த 2001-ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். அரசு நிலம் தொடர்பான இந்த வழக்கில், கடந்த 2004-ஆம் ஆண்டே ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டும், அதன் மீது அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு நீதிபதி கண்டனம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியம் தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டார். “பொது நிலங்களின் பாதுகாவலராக இருக்கும் அரசாங்கம், மதிப்புமிக்க சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது” என்று சாடிய நீதிபதி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.
புதிய சட்டப் பிரிவை அமைக்கப் பரிந்துரை
அரசு தரப்பு வழக்குகளை முறையாகக் கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு தனி சட்டப் பிரிவை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். வருவாய் பிரிவு அதிகாரியின் தலைமையிலான இந்தப் பிரிவு, சிவில் வழக்குகளை அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய நேரத்தில் மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது குறித்து நில நிர்வாக ஆணையருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நீதிமன்றம் காலக்கெடு
அரசு அதிகாரிகளுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை 6 மாதத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மதுரை உயர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டு, விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.