ஓட்டலுக்கு வாடகைக்கு விடப்பட்ட கட்டடத்துக்கு வரி செலுத்தம்படி நடிகர் ரஜினிக்கு சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் சாலையில் தனக்குச் சொந்தமான கட்டடத்தை வசந்தபவன் ஹோட்டலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குத்தகைக்கு கொடுத்திருந்தார்.
இந்த கட்டடத்துக்கு 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 56 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் சேவை வரி செலுத்தம்படி, சேவை வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரஜினி தரப்பில் சென்னை நந்தனத்தில் உள்ள சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 2016ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் எம்.அஜீத்குமார் மற்றும் நீதித்துறை உறுப்பினர் டி.வி.அஜயன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
1994ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் ஓட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டடங்களுக்கு சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், சேவை வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென ரஜினி தரப்பு வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் வாதிட்டார்.
இந்த வாதத்தை மறுத்த சேவை வரிகள் துறை தரப்பு வழக்கறிஞர் ஓ.எம்.ரீனா, ஒட்டலுக்குள் உணவகம், கருத்தரங்க கூடம், கிளப், பார் ஆகியவை இயங்கிவந்ததால், சேவைரி விலக்கு பெற முடியாது என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஓட்டல்களில் தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக இயக்கப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஓட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும் என்றும், அவற்றை தனிக் கட்டடமாக கருத முடியாது என்பதால் வரி விலக்கு பெற ரஜினிக்கு உரிமை உள்ளது என கூறி, சேவை வரி செலுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.