இந்திய கல்வி முறையில் நிலவும் கடும் போட்டி மற்றும் ‘எலிப்பந்தயம்’ (Rat Race) குறித்து கவலை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கணிதத் தேர்வை கூடுதல் பாடமாக எழுத அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
பி. ஷாஜிமோன் என்பவர் தனது மகளுக்காக இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அவரது மகள் 12-ஆம் வகுப்பு CBSE தேர்வில் கணித பாடத்தை கூடுதல் பாடமாக எழுத விரும்பினார். ஆனால், “11-ஆம் வகுப்பில் கணிதப் பாடம் படிக்கவில்லை” என்ற காரணத்தைக் கூறி, CBSE நிர்வாகம் ஜனவரி 8-ஆம் தேதி இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் டி. பரத சக்கரவர்த்தி, இன்றைய கல்விச் சூழல் குறித்து மிகவும் உருக்கமான கருத்துகளைப் பதிவு செய்தார்
- எலிப்பந்தயம்: “உலகம் முழுவதும் கல்வி என்பது கற்றலுக்காக இருக்கிறது. ஆனால், நமது பகுதியில் கல்வி என்பது மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுச்சீட்டாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதற்காகப் பெற்றோர்கள் குழந்தைகளை கொடூரமான எலிப்பந்தயத்தில் ஓட விடுகிறார்கள்.”
- மன அழுத்தம்: இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற வெறியில், கடைசி நேரத்தில் பாடங்களை மாற்றுவது போன்ற செயல்கள் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மாணவியின் கல்வி ஆவணங்கள் ஆய்வு
நீதிமன்றம் அந்த மாணவியின் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி ஆவணங்களை ஆய்வு செய்தது. அதில் அந்த மாணவி கணிதப் பாடத்தைப் (Subject Code: 041) பயின்றது உறுதி செய்யப்பட்டது. ஆனால், CBSE இணையதளத்தில் தரவுகளைப் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட தவறால், ‘உடற்கல்வி’ (Physical Education) என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
நிர்வாக ரீதியான தவறுகளுக்காக ஒரு மாணவியின் எதிர்காலத்தைப் பாழாக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இன்று (மார்ச் 9, 2026) நடைபெற்ற கணிதத் தேர்வை அந்த மாணவி எழுத அனுமதி அளிக்குமாறு CBSE -க்கு உத்தரவிட்டார். மேலும், இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டணங்களை முறைப்படி பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.