அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரைக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
வழக்கின் பின்னணி
சென்னை அடுத்த கோனம்பேடு கிராமத்தில் தம்பிதுரைக்கு சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கிராம நிலங்களை ஆக்கிரமித்து, மின்சாரத் துணை நிலையம், தனியார் பாதை மற்றும் மாணவர் விடுதிகளை கட்டியுள்ளதாக கோனம்பேடு கிராமப் பொதுநல சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டுப் பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
நீதிமன்ற விசாரணை மற்றும் சர்வே அறிக்கை
நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் கே. சுரேந்தர் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (மார்ச்,09,2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சர்வே அறிக்கையில் பின்வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன:
- சுற்றுச்சுவர் மற்றும் கல்லூரி கட்டிடம் எனச் சுமார் 2476 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.