10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள்களின் நகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பெற உரிமையுண்டு என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது
மேல்முறையீட்டு மனுவின் பின்னணி
வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 2023-இல் +2 தேர்ச்சி பெற்ற மாணவி பிரியதர்ஷினி, தனது விடைத்தாள் நகல்களைக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்வு முடிந்து 5 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது எனக் கூறித் தேர்வுகள் இயக்ககம் தகவலை வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து மாணவி மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
தகவல் ஆணையரின் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த மாநிலத் தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பருதி உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, திருத்தப்பட்ட விடைத்தாள்கள் என்பது ‘தகவல்’ என்ற வரையறைக்குள் வரும். எனவே, சட்டமே மேலானது என்ற அடிப்படையில் மாணவர்கள் இதனைப் பெற உரிமையுண்டு என தெரிவித்தார். மேலும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் நிர்ணயித்த கட்டணம் அல்லது RTI விதிகளின்படி ஒரு பக்கத்திற்கு 2 ரூபாய் வீதம் செலுத்தி விடைத்தாள் நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தார். அரசுத் தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள்களை எவ்வளவு காலம் பராமரிக்கிறதோ, அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
விழிப்புணர்வுக்கான அறிவுறுத்தல்
தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த வசதி குறித்து மாணவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்க இணையதளத்தில் விரிவான தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி வலியுறுத்தினார்.
RTI என்றால் என்ன?
பொதுவாக தேர்வுத் துறையினர் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் கோர வாய்ப்பு வழங்குவார்கள். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் படி, அரசுத் துறையிடம் உள்ள எந்தவொரு ஆவணத்தையும் (தகவலையும்) பெறக் குடிமகனுக்கு உரிமையுண்டு. அந்த வகையில், விடைத்தாள் நகல்களைப் பெறுவது மாணவர்களின் சட்டப்பூர்வ உரிமையாகும்.