ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவை மனுதாரருக்கு வழங்காமல் அலட்சியம் காட்டிய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் உள்ள சம்பத் என்பவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி, அவரது மனைவி சந்தியா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சம்பத்துக்கு முன்கூட்டியே விடுதலை பெற உரிமை உள்ளது. 2025 டிசம்பரில் அளித்த விண்ணப்பம் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் மனுதாரரின் விண்ணப்பம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
நீதிமன்றத்தின் கண்டனம்
நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவின் நகலை மனுதாரருக்கு வழங்காதது அரசின் கடமை தவறிய செயலாகும். இதனால் மனுதாரர் வீணாக நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மனுதாரரின் வழக்கு செலவிற்காக தமிழக அரசு ரூ. 5,000 வழங்க வேண்டும். இந்த தொகையை உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்
மனு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மனுதாரர் விரும்பினால் புதிய வழக்கைத் தொடரவும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
நிர்வாகப் பொறுப்புக்கூறல் என்றால் என்ன?
அரசு ஒரு மனுவை நிராகரிக்கும்போது, அந்த தகவலை சம்பந்தப்பட்ட நபருக்கு முறையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறினால், பாதிக்கப்பட்டவர் தனது அடுத்தகட்ட சட்ட உரிமைகளை பயன்படுத்த முடியாமல் போகும். நிர்வாகத்தின் இத்தகைய கவனக்குறைவை சரிசெய்யவே நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.