குற்றம்சாட்டப்பட்டவரின் வாதத்தை கேட்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னர் இருந்த குற்ற விசாரணை முறைச் சட்டத்துக்கு (CrPC) மாற்றாக, தற்போதைய மத்திய அரசு கொண்டுவந்துள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS – Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) என்ற சட்டத்தின் 223 (1)வது பிரிவு, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வாதத்தை கேட்காமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அவரது மனுவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததாகவும், பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவின்படி, அந்த வழக்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதத்தை கேட்டபிறகே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின் காரணமாக புகார்தாரர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதால், இதன் காரணமாக வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும் என்றும், உரிய நேரத்தில் நீதி பரிபாலனம் செய்வதற்கு எதிராக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால், இந்த சட்டப்பிரிவுகளில் உள்ள முரண்பாடுகளை நீக்கி சரியான விசாரணை நடைமுறைகளை வகுக்கவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து மத்திய உள்துறை, சட்டம் மற்றும் நீதித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை பி.என்.எஸ்.எஸ். சட்டத்தை எதிர்த்த வழக்குகளுடன் இணைத்து பட்டியலிடவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.