மாணவி மாயம் என புகார் அளிக்க சென்றபோது அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இளையமகள், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள் வீடு திரும்பாததால், காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மறுநாள் (11-ம் தேதி) காட்டுப்பகுதியின் அடர்ந்த முட்புதருக்குள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் கண்டனம்
வழக்கறிஞர் மாரீஸ்வரி தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவி காணவில்லை எனப் பெற்றோர்கள் புகார் அளிக்க சென்றபோது, “உன் பெண் யாருடனாவது ஓடிப் போயிருப்பாள்” என போலீசார் கூறியது கண்டிக்கத்தக்கது. அப்போதே Zero FIR பதிவு செய்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், புகாரைப் பெற்று நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையினர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அறிவியல் ரீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் மற்றும் பெற்றோரின் வாக்குமூலங்களை ஆடியோ மற்றும் வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு தரப்பு அறிக்கை
விசாரணை குறித்த தற்போதைய நிலையை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், சந்தேகத்திற்குரிய 5 நபர்களிடம் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், வழக்கு விசாரணை குறித்த விரிவான நிலை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.
ஒரு குற்றம் நடந்த இடம் எந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்று பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காவல் நிலையத்திற்குச் சென்றாலும் உடனடியாகப் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே ‘Zero FIR’. பின்னர் அந்தப் புகார் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். உயிர் காக்க வேண்டிய அவசரமான நேரங்களில் இது மிக முக்கியமானது.
Zero FIR என்றால் என்ன?
ஒரு குற்றம் நடந்த இடம் எந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்று பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காவல் நிலையத்திற்குச் சென்றாலும் உடனடியாகப் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே ‘Zero FIR’. பின்னர் அந்தப் புகார் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். உயிர் காக்க வேண்டிய அவசரமான நேரங்களில் இது மிக முக்கியமானது.