சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததை தொடர்ந்து, அவர் மீதான அவமதிப்பு நடவடிக்கையை கைவிட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி
கண்டார்மங்கலம் கிராமத்தில் மக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2022-லேயே பணிகள் முடிந்தும் திறக்கப்படவில்லை என கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த விசாரணையின் போது, “வழக்கு நிலுவையில் இருந்ததால் மருத்துவமனை திறக்கப்படவில்லை” என ஆட்சியர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
நிர்வாகத்தின் இயலாமைக்கு நீதிமன்றத்தை சாக்கு போக்கு சொல்வதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆட்சியர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்தனர்
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஆட்சியர்
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பதில் மனுவில் கூறப்பட்ட விதம் தவறு எனில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பதில் மனுவில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முழுமையாகப் பார்க்காமலேயே அதில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திடலாமா என நீதிபதிகள் கடிந்து கொண்டனர். தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) என்றால் என்ன?
நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தவறாக சித்தரிப்பதோ அல்லது வேண்டுமென்றே நடைமுறைப்படுத்த தவறுவதோ நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். இந்த வழக்கில், நிர்வாகத் தாமதத்திற்கு நீதிமன்றத்தை காரணம் காட்டியது தவறு என சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், தவறு சரிசெய்யப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.