தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாகத்தின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை அங்கமாக விளங்குவது கிராம நிர்வாகம். வட்டாட்சியரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமத்தின் முழுப் பொறுப்பையும் கவனிப்பவர் கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) ஆவார். இவருக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மை பணிகள் மற்றும் வருவாய் கணக்குகள்
- கிராமத்தின் நிலக் கணக்குகளைத் துல்லியமாகப் பராமரித்தல் மற்றும் பயிர் ஆய்வு (Adangal) பணிகளை மேற்கொள்ளுதல்.
- நில வரி, அபிவிருத்தி வரி, கடன்கள் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய இதர தொகைகளை வசூலித்தல்.
- ஒவ்வொரு பசலி ஆண்டின் முடிவிலும் நிலவரி வசூலை முடித்து, ‘ஜமாபந்தி’ எனப்படும் வருவாய் தீர்வாயத்தில் இறுதி தணிக்கையை முடித்தல்.
பொது நிர்வாகம் மற்றும் சான்றிதழ் பணிகள்
- பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்து, உரிய சான்றிதழ்களை வழங்குதல்.
- முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களின் விபரங்களை சரிபார்த்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பதிவேட்டைப் பராமரித்தல்.
- வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் காலங்களில் ஒதுக்கப்படும் பணிகளை மேற்கொள்ளுதல்.
சட்டம், ஒழுங்கு மற்றும் அவசர காலப் பணிகள்
- கிராமத்தில் நிகழும் கொலை, தற்கொலை அல்லது அசாதாரண மரணங்கள் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தல்.
- தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் அறிக்கை அனுப்புதல்.
- கிராம அளவில் அமைதிக் குழுக்களைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியலைத் தயாரித்தல்.
அரசு சொத்து மற்றும் வளப் பாதுகாப்பு
- அரசுப் புறம்போக்கு நிலங்கள், அரசுக் கட்டிடங்கள் மற்றும் மரங்களைப் பாதுகாத்தல்.
- நில ஆக்கிரமிப்புகளை தடுத்தல், ஏரி மற்றும் பாசனக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் கண்காணித்தல்.
- கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்பதைத் தடுத்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல்.
- பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுதல்.
இதர முக்கியப் பொறுப்புகள்
- சர்வே கற்களைப் பராமரிப்பது மற்றும் நிலப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் பணிகளில் ஒத்துழைப்பு நல்குதல்.
- அரசு அவ்வப்போது கொண்டு வரும் புதிய நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ‘மனுநீதி நாள்’ முகாம்களுக்கான ஏற்பாடுகளை செய்தல்.
- கிராமத்தின் மக்கள் தொகை, கால்நடைப் பட்டியல் மற்றும் இதர புள்ளிவிவரங்களை சேகரித்து வட்ட அலுவலகத்திற்கு அனுப்புதல்.
கிராம நிர்வாக அலுவலர் நியமனம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்