பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கோ பாசத்தின் அடிப்படையில் சொத்துகளை ‘தான செட்டில்மென்ட்’ மூலம் வழங்குவது வழக்கம். ஆனால், அவ்வாறு சொத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், காலப்போக்கில் பெற்றோர்களை கவனிக்க தவறினால், அந்த தானத்தை ரத்து செய்ய முடியுமா? இது குறித்துப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை இங்கே காண்போம்.

தான செட்டில்மென்ட் ஏன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது?
சொந்த ரத்த உறவுகளுக்குள் சொத்தை மாற்றும்போது ‘தான செட்டில்மென்ட்’ முறை பெரிதும் விரும்பப்படுகிறது. இதற்கு பதிவுக் கட்டணம் மிகவும் குறைவு என்பது ஒரு முக்கிய காரணமாகும். பொதுவாக, “என்னை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடனோ அல்லது எந்த நிபந்தனையுமின்றியோ இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
நிபந்தனையற்ற தானத்தை ரத்து செய்ய முடியுமா?
- ஒருவர் எந்தவித நிபந்தனையும் இன்றி (Unconditional) தான செட்டில்மென்ட் எழுதித் கொடுத்திருந்தால், அதை அவர் நினைத்த மாத்திரத்தில் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது.
- நிபந்தனையற்ற தானத்தை ரத்து செய்யக் கோரி பத்திரத்தைத் தாக்கல் செய்தால், சார்பதிவாளர் அதை ஏற்கக் கூடாது. அதற்குப் பதிலாக ‘மறுப்புச் சீட்டு’ (Check Slip) வழங்க வேண்டும்.
- தானம் பெற்றவர் (பிள்ளைகள் அல்லது உறவினர்கள்) தானமாகப் பெற்ற சொத்தைத் திரும்பக் கொடுக்கச் சம்மதித்து, பதிவாளர் முன்னிலையில் கையொப்பமிட்டால் மட்டுமே அத்தகைய ரத்து பத்திரத்தைப் பதிவு செய்ய முடியும்.
நிபந்தனையுடன் கூடிய தானம்
- செட்டில்மென்ட் பத்திரத்தில் “என்னைத் தள்ளாத வயதில் பராமரிக்க வேண்டும்” அல்லது “மருத்துவ செலவுகளைக் கவனிக்க வேண்டும்” போன்ற நிபந்தனைகள் சேர்க்கப்பட்டிருந்து, அவை மீறப்பட்டால் ரத்து செய்ய வழிவகை உண்டு.
- ரத்து பத்திரத்தைத் தாக்கல் செய்யும்போது, அசல் செட்டில்மென்ட் ஆவணத்தில் அத்தகைய நிபந்தனைகள் உள்ளனவா என்பதைப் பதிவாளர் உறுதி செய்வார்.
- நிபந்தனைகளை எழுதிப் பெற்றவர் பூர்த்தி செய்யவில்லை என்பதை ரத்து பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சொத்துகளை, ‘பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்புச் சட்டத்தின்’ கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) மூலமாகவும் ரத்து செய்ய முடியும்
பதிவுத்துறையின் முக்கியக் குறிப்புகள்
பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால், சொத்தை எழுதிக் கொடுத்தவர் மட்டும் ஆஜராகி ரத்து பத்திரத்தைப் பதிவு செய்யலாம். நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவே இந்த நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு!
நீங்கள் ஒரு சொத்தை வாங்கும்போது, அது ‘தான செட்டில்மென்ட்’ மூலம் வந்த சொத்து என்றால், அந்த ஆவணத்தில் ஏதேனும் பராமரிப்பு நிபந்தனைகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அந்தப் பத்திரம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதால் சட்ட ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்