அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் உரிமையில் தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது எனக் கூறி, தலைமை நீதிபதி அமர்வு இந்த மனுவை நிராகரித்துள்ளது.
வழக்கின் பின்னணி
திருவள்ளூரைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில் பெரிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிடுகின்றன. இதனால் அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் தங்கள் சின்னத்தைக் கொண்டு செல்லப் போதிய அவகாசம் கிடைப்பதில்லை.
வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு கிடைக்கும் 13 நாட்கள் பிரச்சார அவகாசம் சிறிய கட்சிகளுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதைத் தடை செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வின் விசாரணை
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இதேபோன்ற கோரிக்கையுடன் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.
அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவோ அல்லது கோரிக்கை மனு அளிக்கவோ முடியாது. இது கட்சிகளின் விருப்பம் சார்ந்த விவகாரம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த மனுவில் எவ்வித சட்டப்பூர்வ முகாந்திரமும் இல்லை எனக் கூறி, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கூட்டணி அமைக்கும் உரிமை – விளக்கம்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கொள்கை ரீதியாகவோ அல்லது தேர்தல் வெற்றிக்காகவோ கூட்டணி அமைப்பதற்கு காலக்கட்டுப்பாடுகள் எதுவும் சட்டத்தில் இல்லை. தேர்தல் ஆணையத்தின் விதிகள் வேட்புமனு தாக்கல், சின்னம் ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரக் காலத்தைப் மட்டுமே முறைப்படுத்துகின்றன. கட்சிகளின் உள்கட்சி முடிவுகள் அல்லது கூட்டணிகளில் நீதிமன்றம் தலையிடாது என்பதே இத்தீர்ப்பின் சாராம்சம்.