தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தள்ளிவைக்கக் கோரி, சேப்பாக்கம் தொகுதி வாக்காளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் ஏப்ரல் 4 மற்றும் 11-ஆம் தேதிகளில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பங்கேற்கும் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் ஐபிஎல் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறைக்கு மிகப்பெரிய சுமையை உண்டாக்கும் என மனுதாரர் கவலை தெரிவித்துள்ளார்.
மனுதாரர் முன்வைக்கும் முக்கிய வாதங்கள்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த மனுதாரர் டி.பிரபாகரன் தனது மனுவில் தேர்தல் நேரத்தில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளில் காவல்துறை தீவிரமாக இருக்கும்போது, ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்வது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அரசியல் கட்சிகள் மைதானத்திற்குள் தங்களது ஆதரவாளர்களைக் களம் இறக்கிப் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், இது விளையாட்டு மைதானத்தைத் தேவையற்ற மோதல் களமாக மாற்றக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
எனவே, சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளையும் தேர்தல் முடிந்த பிறகு வேறு தேதிகளில் நடத்த ஐபிஎல் நிர்வாகத்திற்கு உத்தரவிடத் தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும்.
ஒருவேளை திட்டமிடப்பட்ட தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகளை மைதானத்திற்குள்ளும் மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். மைதானத்திற்குள் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், கொடிகள் மற்றும் போஸ்டர்களை காட்சிப்படுத்தாமல் இருப்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலும் ஐபிஎல்-லும் - வரலாறு!
தேர்தல் நடைபெறும் காலங்களில் பொதுவாகவே மாநிலப் பாதுகாப்புப் படைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும். அத்தகைய சூழலில் ஐபிஎல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குப் போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்குவது மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் பெரும் சவாலாக இருக்கும். இதற்கு முன்னரும் இதே போன்ற தேர்தல் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளுக்கு அல்லது இதர மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட வரலாற்றுப் பின்னணி இந்த வழக்கிற்கு வலு சேர்க்கிறது.