சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், “மத நம்பிக்கைகளை ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை” எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) உச்ச நீதிமன்றத்தில் அதிரடி வாதத்தை முன்வைத்துள்ளது. வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை முன்னிட்டு இந்த முக்கிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி 2018-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துப் பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வரும் ஏப்ரல் 7, 2026 முதல் இறுதி விசாரணையைத் தொடங்க உள்ளது.
இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் தனது புதிய விளக்க மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தேவசம் போர்டு வாதங்கள்
தேவசம் போர்டு தனது மனுவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆழமான மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் அந்த சமூகத்தின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். அத்தகைய சமய நம்பிக்கைகள் சரியானவையா என்று எடைபோடும் அதிகாரமோ அல்லது அவற்றில் தீர்ப்பு வழங்கும் அதிகாரமோ நீதிமன்றத்திற்குக் கிடையாது. சமூகத்தின் நம்பிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் உச்ச நீதிமன்றத்தின் கடமையே தவிர, அதில் பகுத்தறிவைப் புகுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
கேரள அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்
தொடக்கத்தில் பெண்களை அனுமதிப்பதில் உறுதியாக இருந்த கேரள அரசு, தற்போது தனது போக்கை மென்மையாக்கியுள்ளது. மார்ச் 14 அன்று தாக்கல் செய்த மனுவில், “பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாடு என்பது ஒரு மதத்தின் அத்தியாவசிய நடைமுறையா என்பதை வெறும் பகுத்தறிவு அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது” எனக் கூறியுள்ளது.
ஐயப்பன் ‘நிஷ்டை பிரம்மச்சாரி’ கோலத்தில் இருப்பதால் நிலவும் அந்த நம்பிக்கை, “உண்மையானது மற்றும் மனசாட்சிக்கு உட்பட்டதா” என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மத உரிமையும் அரசியலமைப்பும் - விளக்கம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 'சமய உரிமை' (Article 25 & 26) மற்றும் 'பாலின சமத்துவம்' (Article 14 & 15) ஆகியவற்றுக்கு இடையிலான மோதலாகவே இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. ஒரு மதத்தின் "அத்தியாவசிய நடைமுறை" (Essential Religious Practice) எது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டா இல்லையா என்பதுதான் ஏப்ரல் 7 அன்று தொடங்கவுள்ள விசாரணையின் மையப்புள்ளி.