உலகப்போர் முடியும் வரை தேனி பெரியகுளம் சாலையில் தினமும் போராட்டம் நடத்த அனுமதி கோரிய மனுதாரருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ₹50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. “காலவரையற்ற போராட்ட அனுமதி சாத்தியமற்றது” எனக் குறிப்பிட்ட நீதிபதி, தேசத் தலைவர்களை இழிவாகப் பேசிய மனுதாரருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
தேனி மாவட்டத்தை சேர்ந்த ‘பத்து ரூபாய் இயக்க’ மாவட்ட அமைப்பாளர் எஸ். பிரபு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் உலக அமைதியை வலியுறுத்தியும், போருக்கு எதிராகவும் பெரியகுளம் சாலையில் தினமும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, “உலகப்போர் முடியும் வரை” அகிம்சை வழிப் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும்.
அந்த இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி தென்கரை போலீஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார்.
தலைவர்களை இழிவாகப் பேசிய மனுதாரர்
இந்த மனு நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அம்பேத்கர் சிலை அல்லது முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே போராட்டம் நடத்துமாறு போலீஸார் கூறிய ஆலோசனையை மனுதாரர் நிராகரித்தார். அதுமட்டுமன்றி, அண்ணல் அம்பேத்கர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைச் “சாதியத் தலைவர்கள்” என நீதிமன்றத்திலேயே மனுதாரர் விமர்சித்தார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
“உலகப்போர் முடியும் வரை” என்பது முடிவில்லாத கால அளவு. இத்தகைய கோரிக்கை நிர்வாக ரீதியாகச் சாத்தியமற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி அம்பேத்கர் மற்றும் தேவர் பெருமகனார் போன்ற வரலாற்று ஆளுமைகளை இழிவாகப் பேசுவதை அனுமதிக்க முடியாது. மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ₹50,000 அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தொகையை ஒரு வாரத்திற்குள் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்க வேண்டும். தவறினால், ஒரு நாள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
போராட்ட உரிமைக்கு உள்ள கட்டுப்பாடுகள் - விளக்கம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் போராட்டம் நடத்தும் உரிமையை 'அடிப்படை உரிமை'யாக வழங்கினாலும், அது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. பொது அமைதி, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் நிர்வாக நடைமுறைகளை மீறி, "நான் சொல்லும் இடத்தில்தான் காலவரையின்றிப் போராடுவேன்" என்று யாரும் பிடிவாதம் பிடிக்க முடியாது. மேலும், நீதிமன்றத்தை ஒரு மேடையாகப் பயன்படுத்தித் தலைவர்களை இழிவுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.