நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற டெண்டர் விதிமீறல்கள் தொடர்பாக ‘உள்ளாட்சி முறைமன்ற நடுவர்’ (Local Bodies Ombudsman) பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த உதயகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் மாநகராட்சி வெளியிட்ட டெண்டர்களில் வெளிப்படையான ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக, 8 டெண்டர்கள் ஒரே நபருக்கும், 4 டெண்டர்கள் மற்றொரு நபருக்கும் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் மிகக் குறைந்த விலைக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் அவை பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் பயன்பாட்டில் இருந்தும், தேவையின்றி தனியார் மண்டபங்களுக்கு அதிகக் கட்டணம் செலுத்திப் பொதுப் பணம் விரயம் செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியிருந்தார்.
ஓம்புட்ஸ்மன் உத்தரவு அலட்சியம்
மனுதாரர் தரப்பில் “இந்த முறைகேடுகள் குறித்து தான் அளித்த புகாரின் பேரில், ‘உள்ளாட்சி ஓம்புட்ஸ்மன்’ உரிய தணிக்கை (Audit) செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தணிக்கைத் துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஓம்புட்ஸ்மன் உத்தரவையே அதிகாரிகள் மதிக்காதது சட்டமீறல் ஆகும்.” என தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முறைகேடு புகார்கள் மற்றும் ஓம்புட்ஸ்மன் உத்தரவை அமல்படுத்தாதது குறித்துத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர், இயக்குநர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் விரிவான பதில் அளிக்க வேண்டும். அதிகாரிகளின் பதிலைப் பொறுத்து இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா அல்லது விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
உள்ளாட்சி ஓம்புட்ஸ்மன் (Ombudsman) என்றால் என்ன?
மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை விசாரிக்க நியமிக்கப்படும் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புதான் 'ஓம்புட்ஸ்மன்'. இந்த அமைப்பு பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். நாகர்கோவில் வழக்கில், இந்த தன்னாட்சி அமைப்பின் உத்தரவையே அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதுதான் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.