மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயில், விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
மதுரையைச் சேர்ந்த உதயசிங் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் திருமங்கலம் – வடுகபட்டி நான்கு வழிச்சாலை பணிக்காக, ALR கட்டுமான நிறுவனத்திற்கு 10,000 கன மீட்டர் மண் அள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே மண் அள்ள வேண்டும் என்பது உட்பட 18 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், அந்த நிறுவனம் 4 முதல் 8 மீட்டர் ஆழம் வரை மண் அள்ளிப் பெரும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மனுதாரரின் குற்றச்சாட்டு
அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக லாரிகளில் மண் கடத்தப்படுவதை GPS பதிவுகளுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களாக மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதால் கண்மாயின் கரைகள் பலவீனமடைந்துள்ளன. மேலும், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, சாலை போடுவதாக ஒப்பந்தம் எடுத்துவிட்டு, அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை அள்ளித் தனியார் கட்டுமானங்களுக்கு விற்பனை செய்வதாக முன்வைக்கப்பட்ட வாதத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், கனிமவளத் துறை இயக்குநர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
திரளி பெரிய கண்மாயில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டதற்கு அபராதம் விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கண்மாய் மணல் அள்ளுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?
பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாய்களில் மண் அள்ளுவது என்பது ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் செல்லக்கூடாது. ஏனெனில், அதிக ஆழத்திற்கு செல்லும்போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்கப்படும் மற்றும் கண்மாயின் நீர் பிடிப்புத் திறன் சீர்குலைந்து கரைகள் உடைய வாய்ப்புள்ளது. சாலைப் பணிகளுக்காக அனுமதி பெற்றுவிட்டு, அந்த மண்ணைத் தனியார் கட்டுமானங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது கனிம வளச் சட்டப்படி கடுமையான குற்றமாகும்.