முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சமி நிலம் மற்றும் விளம்பர முறைகேடு புகார்கள்
திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி தாக்கல் செய்துள்ள மனுவில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக ஏற்கனவே நிலுவையில் உள்ள புகாரை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முரசொலி அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ‘விளம்பரம்’ என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் தாம சேஷாத்ரி நாயுடு வாதிட்டார்.
தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை
வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா என்பது குறித்த புகார் தொடர்பாகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தற்போது எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறினர்.
முரசொலி தரப்பு வாதம்
முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மனுதாரர் வெங்கடாசலபதி ஒரு திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகி என்றும், உண்மைகளை மறைத்து அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார் என்றும் வாதிட்டார். தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவராக இருந்தபோது அவரது தூண்டுதலின் பேரிலேயே இந்த பொய்ப் புகார் கிளப்பப்பட்டது என அவர் குற்றம் சாட்டினார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI), தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் முரசொலி அறக்கட்டளை ஆகியவை விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து ஆணையிட்டனர்.
பஞ்சமி நிலம் என்றால் என்ன?
பஞ்சமி நிலம் என்பது 1892-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலமாகும். இந்த நிலத்தைப் பொதுப்பிரிவினரோ அல்லது வணிக நிறுவனங்களோ வாங்கவோ, ஆக்கிரமிக்கவோ சட்டப்படி அனுமதி இல்லை. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் இத்தகைய பஞ்சமி நிலத்தை சார்ந்தது என்பதுதான் பல ஆண்டுகளாகத் தொடரும் சட்டப் போராட்டத்தின் மையப்புள்ளியாகும்.