தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கின் விசாரணை, இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்றது. நீதிமன்றம் கேட்டிருந்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யாததற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
நீதிபதியின் கிடுக்கிப்பிடி கேள்விகள்
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னதாக நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சில முக்கிய அறிக்கைகளைக் கேட்டிருந்தது. ஆனால், இன்றைய விசாரணையின் போது இரு தரப்பு அரசுகளும் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி வினவியபோது, அரசு தரப்பு வழக்கறிஞர், “தற்போது வழக்கறிஞர் பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது, மேலும் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன” என பதிலளித்தார்.
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி முத்துக்குமரன், “அரசு அறிக்கை தாக்கல் செய்வதற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் என்ன சம்பந்தம்? தேர்தலை சாக்குப்போக்காகக் கூறி காலதாமதம் செய்யக் கூடாது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை இன்று மதியம் 2:30 மணிக்கும் ஒத்திவைத்தார்.
வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை, ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி ஜூன் 19, 2020 அன்று போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அன்று இரவு முழுவதும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து அவ்விருவரும் போலீசாரால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.
பலத்த காயங்களுடன் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் ஜூன் 22 அன்றும், அவரது தந்தை ஜெயராஜ் ஜூன் 23 அன்றும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
சட்டப் போராட்டமும் சிபிஐ விசாரணையும்
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் போராட்டத்தை அடுத்து, இந்த வழக்கு சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது.
நீண்ட விசாரணைக்கு பிறகு கடந்த 23-ஆம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் காவல் நிலைய பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம், போலீசார் சித்ரவதை செய்ததை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து இன்று 9 பேருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
நீதிமன்றத்தின் இன்றைய எதிர்பார்ப்பு
வழக்கு இறுதி நிலையை எட்டியுள்ள சூழலில், தந்தை – மகன் இருவரின் மரணத்திற்கு நேரடி காரணமான போலீசார் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்று மதியம் 2:30 மணிக்கு அரசுத் தரப்பு உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.