வெவ்வேறு மதங்களை சேர்ந்த ஒரு தம்பதியினர் இணைந்து வாழ்வதைத் தடுத்த விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளது. “நீதிமன்றம் இவர்களை மதம் கடந்து, தங்களின் விருப்பப்படி வாழும் இரண்டு முதிர்ந்த தனிநபர்களாகவே பார்க்கிறது” என்று நீதிபதி விவேக் குமார் சிங் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி
மதங்களுக்கிடையேயான உறவில் (Interfaith relationship) இணைந்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினர் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தனர். தாங்கள் நீண்டகாலமாகப் பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும், ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
தங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு காவல்துறை முறையான பதில் அளிக்கவில்லை என்றும், அதனால் தங்களுக்கு சட்டப்பூர்வப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
நீதிபதி வழங்கிய வாதங்கள்
இந்த நீதிமன்றம் மனுதாரர்களை இந்து மற்றும் முஸ்லிம் என வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாகப் பார்க்கவில்லை. மாறாக, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கணிசமான காலமாக அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இணைந்து வாழ்ந்து வரும் இரண்டு வயது வந்த தனிநபர்களாகவே பார்க்கிறது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் கூட இணைந்து வாழ்வதற்கு சட்டம் அனுமதி அளிக்கும் நிலையில், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வாழும் வயது வந்த இருவர் இடையிலான ஒரு எதிர்பாலின உறவின் மீது எந்தவொரு தனிநபரோ, குடும்பமோ அல்லது ஏன் அரசோ கூட எவ்வாறு ஆட்சேபனை தெரிவிக்க முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை
நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீண்டும் உறுதிப்படுத்தியது. ஒரு நபர் தான் விரும்பும் ஒருவருடன் இணைந்து வாழ்வதற்கான உரிமை என்பது ‘வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம்’ எனும் அடிப்படை உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகும். ஒரு தனிப்பட்ட உறவில் தலையிடுவது என்பது, சம்பந்தப்பட்ட நபர்களின் ‘தேர்வுச் சுதந்திரம்’ எனும் உரிமையின் மீதான ஒரு தீவிரமான அத்துமீறலாகவே அமையும். ‘கண்ணியத்துடன் வாழும் உரிமை’ மற்றும் ‘துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை’ ஆகியவை அடிப்படை உரிமையின் வரம்பிற்குள்ளேயே அடங்கியுள்ளன.
நீதிமன்றத்தின் இறுதி முடிவு
இந்த விவகாரத்தில் தம்பதியினர் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பதை அரசுத் தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தம்பதியினரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி மனுவை முடித்து வைத்தார்.
ஏன் இந்தப் பாதுகாப்பானது அவசியமாகிறது? - விளக்கம்!
சமூகத்தில் இன்றும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வதை ஒரு 'ஒழுக்கக்கேடாக' அல்லது 'சமய விரோதமாக' பார்க்கும் போக்கு உள்ளது. ஆனால், சட்டம் 18 வயது பூர்த்தியடைந்த ஒரு பெண்ணும், 21 வயது பூர்த்தியடைந்த ஒரு ஆணும் (அல்லது சட்டப்பூர்வ வயது வந்தவர்கள்) யாருடைய வற்புறுத்தலும் இன்றி இணைந்து வாழ்வதற்கு முழு உரிமையை வழங்குகிறது. இதனை 'லிவ்-இன்' (Live-in) உறவு என்கிறோம். மதம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட விஷயம்; அது ஒருவரது வாழ்வுரிமையை தடுக்கும் காரணியாக இருக்கக்கூடாது என்பதே இத்தீர்ப்பின் சாரம்.