விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான முனீஸ்வரன் தொடர்பான முந்தைய வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
தூத்துக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரி மற்றும் சுப்புராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த இவர்களது மகள், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள சீமைக்கருவேல முள் காட்டிற்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் தேடியபோது, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்பவனைப் போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையின் அலட்சியம் குறித்துப் புகார்
மகள் காணாமல் போனது குறித்து குளத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த போலீசார் இழிவான வார்த்தைகளால் பேசியுள்ளனர். நடவடிக்கை எடுக்காமல் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அலைக்கழித்துள்ளனர். அங்கிருந்து மீண்டும் குளத்தூர் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நேரத்தில்தான், உறவினர்கள் சிறுமியின் உடலைக் கண்டெடுத்துள்ளனர் காவல்துறையினர் மிகவும் அலட்சியமாக நடந்துக்கொண்டனர் என மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
ஜாமீன் ரத்து கோரிக்கை
இந்த வழக்கில் முனீஸ்வரன் சம்பந்தப்பட்ட முந்தைய வழக்கைப் பெற்றோர் சுட்டிக்காட்டி ஏற்கனவே ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முனீஸ்வரனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
அந்த ஜாமீன் உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்தபோதுதான் அவன் எங்கள் மகளைக் கொடூரமாகச் சிதைத்துள்ளான். எனவே, அந்த மூதாட்டி கொலை வழக்கில் எங்களையும் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும். அவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரப்பட்டது.
நீதிமன்றத்தின் நிலைப்பாடு
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஒரு குடும்பத்தின் கல்வி பயிலும் பெண் குழந்தை, அடிப்படை வசதி (கழிப்பறை) இல்லாததால் வெளியே சென்றபோது இழந்த உயிர் சமூகத்தையே உலுக்கியுள்ளது. இந்த மனு விரைவில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'லிடஸ் பென்டன்ஸ்' (Litis Pendent) என்றால் என்ன?
ஒரு நபர் ஜாமீனில் இருக்கும்போது மீண்டும் அதேபோன்ற அல்லது தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டால், அவரது முந்தைய ஜாமீனை ரத்து செய்ய (Cancellation of Bail) பாதிக்கப்பட்ட தரப்பிற்கு முழு உரிமை உண்டு. இந்த வழக்கில், ஒரு மூதாட்டியைக் கொன்ற வழக்கில் ஜாமீன் பெற்றவர் மீண்டும் ஒரு சிறுமியைக் கொன்றிருப்பது, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாகப் பார்க்கப்படுகிறது.