நீலகிரி மாவட்டத்தில் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதாகக் கூறி, இரண்டு தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகளைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு கவனித்து வருவதால், அதில் தலையிட முடியாது என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், உரிய அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ‘ஆகாஷ் ரூமஸ் அண்ட் காட்டேஜஸ்’ மற்றும் ‘கோல்டன் லர்ச் ரெஸிடன்சி’ ஆகிய இரு விடுதிகளும் முறையான உரிமம் இன்றி செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த இரு விடுதிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விடுதி உரிமையாளர்களின் வாதம்
தங்களுக்கு வழங்கப்பட்ட சீல் வைக்கும் உத்தரவை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெற்றுள்ளோம். ஆனால், எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அவசர கதியில் சீல் வைத்துள்ளனர். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” என வாதிட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த ஆண்டு ஜூலை மாதமே விதிமீறல்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகும் விதிமீறல்கள் தொடர்ந்ததாலேயே சீல் வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் அரசிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது,” என விளக்கமளித்தார்.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நேரடியாக கண்காணித்து வருகிறது. எனவே, அந்த நடைமுறைகளில் இந்த அமர்வு தலையிட்டால் அது விசாரணையைப் பாதிக்கும். சீல் வைக்கப்பட்டதில் ஏதேனும் விதிமீறல் இருப்பதாக மனுதாரர்கள் கருதினால், அவர்கள் சம்பந்தப்பட்ட சிறப்பு அமர்வைத்தான் அணுக வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க அவகாசம் வழங்காமல் நேரடியாக நீதிமன்றத்தை நாடியதால், தற்போது இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இருப்பினும், மனுதாரர்கள் இந்த விவகாரம் தொடர்பாகச் சிறப்பு அமர்வை அணுகுவதற்கு இந்தத் தீர்ப்பு எந்தவிதமான தடையாகவும் இருக்காது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.