தமிழகத்தில் பொது அமைதிக்கும் ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்த ‘குண்டர் சட்டம்’ பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டம் குறித்த விரிவான விபரங்கள் இதோ:
சட்டத்தின் முழுப் பெயர்
பரவலாக ‘குண்டர் சட்டம்’ என்று அழைக்கப்பட்டாலும், இதன் அதிகாரப்பூர்வப் பெயர்: “தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள் மற்றும் திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம், 1982” என்பதாகும்.
கைது செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு?
இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய மாவட்ட அளவில் உயர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது:
நகர்ப்புறங்களில் மாநகரக் காவல் ஆணையருக்கும் (Commissioner of Police), கிராமப்புறங்களில்: மாவட்ட ஆட்சியருக்கும் (District Collector) அதிகாரம் உள்ளது.
‘குண்டர்’ என்பதற்கான வரையறை
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் தொடர்ச்சியாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் அல்லது அத்தகைய ஒரு குழுவில் உறுப்பினராக இருப்பவர் என அதிகாரிகளால் கருதப்படுபவர்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
மேல்முறையீடு மற்றும் ஆலோசனைக் குழு
குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்தது சரியானதுதானா என்பதை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்ட ஒரு ஆலோசனைக் குழு (Advisory Board) அமைக்கப்படும். இந்தக் குழுவின் முடிவிற்குப் பிறகும், பாதிக்கப்பட்ட நபர் உயர் நீதிமன்றத்தை அணுகித் தடுப்புக் காவலுக்கு எதிராக நிவாரணம் பெற முடியும்.
சிறைத் தண்டனைக் காலம்
இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால், அவரை ஓராண்டு காலம் (12 மாதங்கள்) பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க முடியும். இருப்பினும், மாநில அரசு நினைத்தால் 12 மாதங்களுக்கு முன்னரே அவரை விடுவிக்க அதிகாரம் உண்டு.
நிபந்தனை மீறலுக்கான தண்டனை
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் (Conditions) விடுவிக்கப்பட்ட நபர் அந்த நிபந்தனைகளை மீறினால், அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
திருட்டு விசிடி (Video Piracy) மற்றும் சட்டத் திருத்தம்
திரையுலகினரின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று, கடந்த 2006-ம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, திரைப்படங்களைத் திருட்டுத்தனமாகப் பதிவு செய்வது மற்றும் சி.டி-க்களில் (CD) பதிவேற்றி விற்பனை செய்வதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்