ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி உள்ளிட்ட அதன் முக்கிய நிர்வாகிகள் மீது, எல்ஐசி நிறுவனத்தை ஏமாற்றிப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
வழக்கின் பின்னணி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது உண்மையான நிதி நிலையை மறைத்து, லாபகரமாக இயங்குவது போன்ற பொய்யான சித்திரத்தை எல்ஐசி-யிடம் காட்டியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘மாற்ற முடியாத கடன் பத்திரங்களில்’ (Non-Convertible Debentures – NCDs) சுமார் ரூ.4,500 கோடி முதலீடு செய்யுமாறு அனில் அம்பானி தரப்பு எல்ஐசி-யைத் தூண்டியுள்ளது. இந்த முதலீட்டிற்குப் பாதுகாப்பாக ரிலையன்ஸ் காட்டிய சொத்து விவரங்கள் மற்றும் கார்ப்பரேட் உத்தரவாதங்கள் அனைத்தும் போலியானவை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கானது எல்ஐசி (LIC) அளித்த விரிவான புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது
தணிக்கை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கையில் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியை, ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல், பிற இடங்களுக்குத் சட்டவிரோதமாகத் திருப்பிவிட்டுள்ளது. இதன் விளைவாக, எல்ஐசி முதலீடு செய்த தொகையில் சுமார் ரூ.3,750 கோடி திரும்பப் பெற முடியாத அளவிற்கு வாராக்கடனாக (NPA) மாறி, மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ-யின் சட்ட நடவடிக்கை
எல்ஐசி-யின் புகாரைத் தொடர்ந்து சிபிஐ குற்றவியல் சதி (Criminal Conspiracy), மோசடி (Cheating), போலி ஆவணங்கள் தயாரித்தல் (Forgery), ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறைகேடுகள் ஆகிய வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து. அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அனில் அம்பானிக்கு அதிகரிக்கும் நெருக்கடி
ஏற்கனவே பல்வேறு வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமல் திவாலாகும் நிலையில் (Insolvency) உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானிக்கு, சிபிஐ-யின் இந்தப் புதிய வழக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, எல்ஐசி போன்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை சார்ந்து இந்த மோசடி புகார் எழுந்துள்ளதால், விசாரணை மிகத் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.