திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. “நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த வேண்டாம்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
வழக்கின் பின்னணி
திருப்பரங்குன்றம் மலை உச்சி தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளைத் தனி நீதிபதியே விசாரித்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தார்.
தனி நீதிபதிக்கு எதிரான மேல்முறையீடு
தனி நீதிபதியின் விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மற்றும் தர்கா தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தர்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் தனி நீதிபதி ஒரு தனியார் நிகழ்ச்சியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளார். இதன் மூலம் அவர் வழக்கின் பொருளோடு இணைந்துவிட்டதால், அவரே இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்கா தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யத் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டவிரோதமானத என வாதிட்டார்.
“நீதிமன்றத்தை மிரட்ட வேண்டாம்”
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. நீதிமன்றத்தை யாரும் அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது ஒரு சிறிய பிரச்சனை, ஆனால் ஊதிப் பெரிய பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. யாரும் நீதிமன்றத்தில் குரலை உயர்த்தி மிரட்டும் நோக்கில் பேச வேண்டாம். இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அரசு தரப்பு வாதம் மற்றும் நீதிமன்றத்தின் தடை
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், “தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தடை விதித்த பின்பும், அவர் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்” என சுட்டிக்காட்டினர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்துவிட்ட பிறகு, அதனைத் தனி நீதிபதி விசாரிக்க முடியாது. இந்த அவமதிப்பு வழக்குகளைத் தனி நீதிபதி விசாரிப்பதா அல்லது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதா என்பது குறித்து இந்த நீதிமன்றம் முடிவெடுக்கும். அதுவரை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.
அடுத்தகட்ட விசாரணை
இந்தத் தடையுத்தரவைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.