பாட்டாளி மக்கள் கட்சியின் ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தேர்தல் களத்தில் சின்னம் தொடர்பான இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது.
வழக்கின் பின்னணி
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பினரிடையே நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு முடியும் வரை ‘மாம்பழம்’ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு அவசர வழக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்
நாங்கள் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கக் கோரவில்லை. தேர்தலில் மாம்பழம் சின்னத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதில் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவே சின்னத்தை முடக்கக் கோருகிறோம். சின்னம் முடக்கப்பட்டால் இரு தரப்பினரும் பொதுவான புதிய சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது
சின்னம் ஒதுக்கீடு தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை அணுகும்படி உரிமையியல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக தற்போது சின்னத்தை முடக்கக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது சட்டப்படி செல்லாது என அன்புமணி ராமதாஸ் தரப்பு வாதிட்டது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வேட்புமனு பரிசீலனை முடிந்து, வாபஸ் பெறுவதற்கான கால அவகாசமும் முடிந்துவிட்டது. தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. இந்த சூழலில் நீதிமன்றங்கள் தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் அதிரடி முடிவு
வழக்கின் வாதங்கள் முழுமையடையாத நிலையில், விசாரணையை நாளைக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அப்போது ராமதாஸ் தரப்பில், “நாளை வரை மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இடைக்காலத் தடை கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி தமிழ்ச்செல்வி, மாம்பழம் சின்னத்தை ஒதுக்கத் தடை விதிக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கின் இறுதி விசாரணையை நாளைக்கு (ஏப்ரல் 11) ஒத்திவைத்தார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் சின்னம் தொடர்பான இந்த சட்டப் போராட்டம் பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை வழங்கப்படவுள்ள தீர்ப்பு சின்னத்தின் விதியைத் தீர்மானிக்கும்.