சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகர் சார்பில் வாக்காளர்களுக்கு ₹10,000 மதிப்பிலான க்யூ ஆர் கோடு டோக்கன்கள் விநியோகிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கைத் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைப் பதிவு செய்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17, 2026) முடித்து வைத்தது.
வழக்கின் பின்னணி
வழக்கறிஞர் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் துறைமுகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகர் சார்பில், அவரது முகவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு க்யூ ஆர் கோடு மற்றும் தனித்துவமான வரிசை எண் கொண்ட டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கனை வைத்திருப்பவர்கள், தேர்தலில் மனோகர் வெற்றி பெற்ற பிறகு அவரது அலுவலகத்திற்குச் சென்று ₹10,000 பெற்றுக் கொள்ளலாம் என வாக்குறுதி அளிக்கப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னம் திரையில் தோன்றுவதாகவும், இது வாக்காளர்களுக்கு ஆசை காட்டும் ஊழல் நடவடிக்கை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “இது தொடர்பாக இரண்டு முறை புகார்கள் பெறப்பட்டன. பறக்கும் படைகள் (Flying Squad) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தின. ஆனால், அங்கே டோக்கன்களோ அல்லது அது தொடர்பான ஆவணங்களோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.”
இருப்பினும், புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாலும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருவதாலும் மேற்கொண்டு இந்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
அரசியல் பரபரப்பு: ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் ₹8,000 கூப்பன் விநியோகிப்பதாகத் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் மீதான இந்த டோக்கன் புகார் தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, துறைமுகம் தொகுதியில் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் இந்த எப்.ஐ.ஆர் பதிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.