சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி-க்கு ஆளுநர் ஆர. என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி-யை நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை லோக் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்.ரகுபதி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், மத்திய – மாநில அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசுத்துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து 1992 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித் துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட, அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 55 வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.