நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் ₹634 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாரில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக M.P. ஐ.எஸ். இன்பதுரை தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் விளக்கங்களை ஏற்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பணி நியமனங்களுக்காக ₹634 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, இது குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக FIR பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (மார்ச் 25, 2026) தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
காரசாரமான விவாதங்கள்
“வழக்குப்பதிவு செய்வதற்குத் தமிழக அரசின் முன் அனுமதி (Sanction) தேவைப்படுகிறது. அதற்காகவே தாமதம் ஏற்படுகிறது” என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், “உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகு, மீண்டும் அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? நீதிமன்ற உத்தரவை விட அரசின் அனுமதி மேலானதா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசின் பதில் மற்றும் நீதிமன்றத்தின் முடிவு
நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் ‘மறு ஆய்வு மனு’ (Review Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
நீதிமன்ற உத்தரவு vs அரசின் அனுமதி - விளக்கம்!
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால், ஒரு குற்றச்சாட்டிற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கருதி நீதிமன்றமே "உடனடியாக வழக்குப் பதிவு செய்" என்று ஆணையிடும்போது, மீண்டும் அரசிடம் அனுமதி கோருவது காலதாமதம் செய்யும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இதையேதான் நீதிபதிகள் இன்று கடுமையாக சாடியுள்ளனர்.