சிவகங்கை கச்சநத்தத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஒருவரை மட்டும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான கோவிலின் திருவிழாவில், பிற சாதியினருக்கு முன்னுரிமை வழங்கப்படாதது தொடர்பான தகராறில், 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டு, ஆதி திராவிடர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. ஆப்போது நடந்த வன்முறையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் கொல்லப்பட்டு, 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு சிவகங்கை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து 2022ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு, 27 பேரில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், இளையராஜா என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்தும், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்துள்ளனர்.