கசானா ஜூவல்லரி நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி தீர்வு விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு வருமான வரி தீர்வு ஆணையத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 21.04.2016 அன்று கசானா ஜூவல்லரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அளித்த வாக்குமூலத்தில், சுத்திகரிப்பு இழப்பை 3% முதல் 5% வரை உயர்த்தி காட்டி, உபரிதங்கத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் சுமார் ₹70.66 கோடி வருவாய் ஈட்டியதை ஒப்புக்கொண்டார்.
மேலும், ₹80 கோடி மதிப்பிலான தங்கம் (268.200 கிலோ) ஊழியர்கள் மற்றும் முகவர்களிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது .
செட்டில்மென்ட் விண்ணப்பம் நிராகரிப்பு
இந்த வரி விவகாரங்களை சுமுகமாக முடிக்க, அந்நிறுவனம் 16.10.2018 அன்று வருமான வரி செட்டில்மென்ட் கமிஷனிடம் விண்ணப்பித்தது. இருப்பினும், நிறுவனம் தனது வருமானம் குறித்த முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை அளிக்கவில்லை என கூறி, அந்த விண்ணப்பத்தை கமிஷன் நிராகரித்தது இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதியும், செட்டில்மென்ட் கமிஷனின் முடிவை சரி என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்நிலையில், நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் முக்கிய கண்காணிப்புகள்
தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, நிறுவனம் தனது வருமானம் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளதை நீதிமன்றம் கவனித்தது. 80 கோடி ரூபாயில் சுமார் 70 கோடி ரூபாய்க்கு தீர்வு காண ஏற்கனவே நிறுவனம் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள தொகை குறித்து விரிவாக ஆராய வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் கருதினர்.
அதிரடி உத்தரவு
தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பையும், வருமான வரி தீர்வு ஆணையத்தின் முந்தைய உத்தரவையும் ரத்து செய்த நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் ஆணையத்திற்கு திருப்பி அனுப்பினர். கசானா நிறுவனம் அளித்துள்ள கூடுதல் விளக்கங்களை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மீண்டும் புதிதாக பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஆணையத்திற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
வருமான வரி தீர்வு ஆணையம் என்றால் என்ன?
வருமான வரித் துறையினரால் ஒரு நிறுவனம் அல்லது நபர் மீது ஆய்வு நடத்தப்படும்போது, வரி தொடர்பான சிக்கல்களை நீண்ட காலப் போராட்டமின்றி பேசி தீர்த்துக்கொள்ள உருவாக்கப்படுபதே வருமான வரி தீர்வு ஆணையம் ஆகும். இது வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தை வெளிப்படையாகக் கூறி, அபராதம் அல்லது தண்டனையிலிருந்து ஓரளவு விலக்குப் பெற உதவும் ஒரு சட்டப்பூர்வமான வழிமுறையாகும்.