ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரிமைகள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். சட்டம் ஒருவரைப் பாதுகாப்பதற்கான பல வழிமுறைகளை வழங்கியுள்ளது.
கைதுக்கான காரணங்கள் மற்றும் வழக்கறிஞர் ஆலோசனை
கைது செய்யப்படுபவர்களிடம் அதற்கான காரணங்கள் முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். ஒரு நபர் பிடிப்பாணையின் (Warrant) அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தால், அந்த பிடிப்பாணையைப் பார்க்க அவருக்கு முழு உரிமை உண்டு. அதேபோல, கைது செய்யப்படும் நபர் தனது விருப்பத்திற்கேற்ப ஒரு வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு கலந்தாலோசனை செய்வதற்கும் சட்டம் வழிவகை செய்கிறது
நீதிமன்ற ஆஜர்படுத்தல் மற்றும் பிணை குறித்த தகவல்கள்
கைது செய்யப்படுபவர் 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும். அவர் பிணையில் (Bail) விடுவிக்கப்படக் கூடியவரா என்பது குறித்த தகவலையும் காவல்துறை அந்த நபருக்குத் தெரிவிக்க வேண்டும். மிக முக்கியமாக, நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஒருவரை குற்றவாளியாக (Convict) கருத முடியாது; கைது என்பது தண்டனையல்ல என்பதை சட்டம் தெளிவுபடுத்துகிறது.
விலங்கிடுதல் தொடர்பான உச்ச நீதிமன்ற விதிமுறைகள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒருவர் வன்முறையாளராகவோ, தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பவராகவோ இருந்தால் ஒழிய, கைது செய்யப்படும் நபருக்கு விலங்கிடக் கூடாது. இது தனிமனித கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய விதியாகும்.
காவலில் வைத்தல் குறித்த சட்ட விதிகள்
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதிமன்றம் செல்லத் தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். ஒரு நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு, காவல் துறைக்கு அந்த அதிகாரம் இல்லை. நீதித்துறை நடுவரின் அனுமதி இன்றி ஒரு நிமிடம் கூட கூடுதல் காவலில் வைக்கக் கூடாது.
உச்ச நீதிமன்றத்தின் கட்டாய வழிகாட்டுதல்கள்
கைது நடவடிக்கையின் போது கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்
- கைது செய்கின்ற அதிகாரி முறையான அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
- கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே ‘கைது குறிப்பு‘ (Arrest Memo) தயார் செய்யப்பட வேண்டும்.
- கைது செய்யப்பட்ட விபரத்தை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தெரிவிக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டவரின் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- விசாரணையின் போது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
நடைமுறை மீறல்களும் தீர்வுகளும்
காவல்துறை இந்த நடைமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால், வழக்கறிஞர் மூலம் அதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியை நீதிமன்றம் கண்டிக்கலாம். சட்ட நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாத பட்சத்தில், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை கூட செய்யலாம்.
நன்றி!
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்