மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கக் கூடாது என்ற அரசாணை, இரண்டாண்டு ஒப்பந்த பணி மருத்துவர்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள், அரசு விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என விதி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்பு நிபுணத்துவத்தில் மேற்படிப்பு முடித்த தங்களை, இரண்டு ஆண்டுகள் பணிக்கு அரசு மருத்துவமனைகளில் நியமிக்காமல், ஆரம்ப சுகாதார மையங்களில் நியமித்துள்ளதாகக் கூறி, 71 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2009 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும் என்றும், சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை நியமிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து விடுவித்து அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் அல்லது இரண்டாண்டு பணிக்காலத்தை ஓராண்டாக குறியக்கவேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கக் கூடாது என்ற அரசாணை, இரண்டாண்டு ஒப்பந்த பணி மருத்துவர்களுக்கு பொருந்தாது என்றும், மருத்துவ மேற்படிப்பு முடித்த மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிப்பதால் அவர்களின் சேவை வீணாவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறியதுடன், பணிக்காலத்தை ஓராண்டாக குறைக்க முடியாது என்று சுட்டிக்காட்டி வழக்கை முடித்துவைத்தார்.
மேலும், மருத்துவ படிப்பை முடித்து இரண்டாண்டு ஒப்பந்த பணியில் உள்ள மருத்துவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.