பாதுகாப்பற்ற முறையில் ஊசி செலுத்தியதால் ஏற்பட்ட ‘கேஸ் கேங்க்ரீன்’ (Gas Gangrene) பாதிப்பால் சிறுவன் உயிரிழந்ததை உறுதி செய்த ஆணையம், மருத்துவமனையின் சேவை குறைபாட்டைக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
வழக்கின் பின்னணி
சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் அஷ்வந்த். இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், ஜோன்ஸ் சாலையில் உள்ள நலம் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு செலுத்தப்பட்ட ஊசி போட்ட இடத்தில் கடுமையான வீக்கமும், வலியும் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.
மற்றொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, உடல் திசுக்களை வேகமாக அழித்து நச்சு வாயுவை உருவாக்கும் ‘கேஸ் கேங்க்ரீன்’ என்ற அபாயகரமான பாக்டீரியா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, சில நாட்களிலேயே சிறுவன் அஷ்வந்த் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
நுகர்வோர் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு
தனது மகனின் மரணத்திற்குக் காரணமான மருத்துவமனை மற்றும் மருத்துவரின் அலட்சியத்திற்காக ₹2 கோடி இழப்பீடு வழங்கக் கோரி சீனிவாசன் சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி, கிருமி நீக்கம் செய்யப்படாத அல்லது பாதுகாப்பற்ற முறையில் ஊசி செலுத்தியதே தனது மகனின் மரணத்திற்கு தார்மீக காரணம் என அவர் வாதிட்டார்.
நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு
இந்த மனுவை விரிவாக விசாரித்த நுகர்வோர் ஆணையம் நோய் கிருமி ஒழிக்கும் முறைகளைப் (Sterilization) முறையாகப் பின்பற்றாமல் ஊசி செலுத்தியதால் தான் சிறுவன் உயிரிழந்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இது மிகத் தெளிவான சேவை குறைபாடு என்று குறிப்பிட்டது.
சிகிச்சை செலவு, சேவை குறைபாடு, மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி மொத்தம் ₹40,42,461 இழப்பீடாக வழங்கவும் ஆணையம் உத்தரவிடப்பட்டது.
இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையும், சிகிச்சை அளித்த மருத்துவரும் இணைந்து அஷ்வந்தின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என ஆணையம் ஆணையிட்டது.
‘கேஸ் கேங்க்ரீன்’ மற்றும் மருத்துவப் பொறுப்பு – விளக்கம்!
‘கேஸ் கேங்க்ரீன்’ என்பது மிகவும் அரிதான மற்றும் ஆபத்தான தொற்று. கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்தும் போதோ அல்லது ஊசி போடும் இடத்தை முறையாக சுத்தம் செய்யாத போதோ இத்தகைய பாக்டீரியாக்கள் உடலுக்குள் ஊடுருவி திசுக்களை அழுகச் செய்யும். ஒரு நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வது மருத்துவமனையின் கடமை. அதில் தவறும் பட்சத்தில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெறப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை இந்தத் தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது.