மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் பெயர், குரல், புகைப்படம் மற்றும் அவரது தனித்துவமான அடையாளங்களை வணிக ரீதியாகவோ அல்லது அவதூறு பரப்பும் வகையிலோ அனுமதியின்றிப் பயன்படுத்த தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தனது ‘ஆளுமை உரிமைகளை’ (Personality Rights) சட்டப்பூர்வமாகப் பாதுகாத்த முன்னணி தென்னிந்திய நடிகராக அவர் மாறியுள்ளார்.
வழக்கின் பின்னணி
நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவில் தனது அனுமதி பெறாமல் தனது உருவம் பொறித்த டி-ஷர்ட்கள் மற்றும் இதர வணிகப் பொருட்களை இ-காமர்ஸ் தளங்கள் விற்பனை செய்வது. சமூக வலைதளங்களில் தனது பெயரைப் பயன்படுத்தித் தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கங்களை வெளியிடுவது. ஒரு தனிமனிதனாகத் தனது குரல் மற்றும் உருவத்தின் மீது தனக்குள்ள பிரத்யேக உரிமையை (Personality Rights) பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
நீதியரசர் ஜோதி சிங் வழங்கிய உத்தரவுகள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மோகன்லாலின் அடையாளங்களைச் சுரண்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். மோகன்லாலின் உரிமைகளை மீறும் வகையில் இணையத்தில் உள்ள வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவேற்றியவர்களின் அடிப்படைத் தகவல்களை (Basic Subscriber Information – BSI) இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சட்டவிரோதமாக அவரது படத்தைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் அடுத்தகட்ட நகர்வு
நீதிமன்றம் மோகன்லால் தரப்பிற்குப் சட்டவிரோதமாகத் தனது அடையாளங்களைப் பயன்படுத்தும் இணையதள இணைப்புகள் (URLs) குறித்த முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 4, 2026-க்கு ஒத்திவைத்தனர்.
'ஆளுமை உரிமை' (Personality Rights) என்றால் என்ன?
ஒரு பிரபலமான நபர் தனது உழைப்பால் உருவாக்கிய பெயர், புகழ் மற்றும் அடையாளத்தை (குரல், நடை, கையெழுத்து போன்றவை) மற்றவர்கள் அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பே இதுவாகும்.
ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அனில் கபூர் மற்றும் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் இத்தகைய சட்டப் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். இப்போது அந்தப் பட்டியலில் மோகன்லாலும் இணைந்துள்ளார்.